Friday, September 14, 2007

ஷார்ஜா: மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை

ஷார்ஜா: மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை

ஆகஸ்ட் 31, 2007

ஷார்ஜா: ஷார்ஜாவில் இந்தியர் ஒருவர் 3வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

ஷார்ஜாவின் அபு சகாரா என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஹைதாரபாத்தைச் சேர்ந்தவர் முகம்மது அப்துல் ரஷீத் முகம்மது கெளஸ் (41). இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஹைதராபாத்தில் உள்ள பர்காஸ் என்ற இடத்தில் வசித்து வருகின்றனர்.

கெளஸ், ஷார்ஜாவில் உள்ள ஒரு ஆட்டோ உதிரி பாக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாதம் 5000 தினார் சம்பளம் தருவதாக பேசப்பட்டிருந்தது. ஆனால் அதை விட குறைந்த அளவு சம்பளமே கெளஸுக்குத் தரப்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கெளஸின் உறவினர் கூறியுள்ளார்.

ஆனால் இதை கெளஸ் வேலை பார்த்து வந்த சமீரா ஆட்டோ உதிரி பாக நிறுவனம் மறுத்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தற்கொலை செய்து கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு 54 பேரும், 2003ல் 64 பேரும், 2005ல் 82 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மட்டும் 100 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருப்பது சம்பளப் பிரச்சினை, நிதி நெருக்கடி மற்றும் தனிப்பட்ட குடும்பக் காரணங்கள்தான்.

இந்தியர்களின் தொடர் தற்கொலைகளைத் தொடர்ந்த இந்தியத் தூதரகம், நெருக்கடி தடுப்பு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மனக் குழப்பம், விரக்தி, தற்கொலை மனோபாவம் உள்ளவர்களுக்கு இவர்கள் கவுன்சிலிங் மூலம் உதவுகிறார்கள்.

கடந்த ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன் படி ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழ்க்கிழமை வரை தினசரி காலை 11 மணி முதல் 6 மணி வரை கவுன்சிலிங் மையம் இயங்குகிறது. இந்த மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 050-9433111. வாரம் முழுவதும் இது இயங்குகிறது.

இந்த கவுன்சிலிங் மையத்தை அணுகி உதவி பெறுமாறு இந்தியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

No comments: