அவுட்பாஸ் குழப்பம்: அவதியில் இந்தியத் தொழிலாளர்கள்!
திங்கள்கிழமை, செப்டம்பர் 17, 2007
அபுதாபி:
சட்டவிரோதமாக குடியேறிய நூற்றுக்கணக்கான இந்தியர்கள், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ள பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் நாடு திரும்புவதற்காக, அவுட் பாஸ் கோரி இந்திய தூதரகத்தில் காத்துள்ளனர். ஆனால் தூதரக செயல்பாடுகள் குழப்பமாக இருப்பதால் அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
சட்டவிரோதமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்து வேலை பார்த்து வருபவர்களுக்காக எமிரேட்ஸ் அரசு பொது மன்னிப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் பலர் தங்களது நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். ஏராளமான இந்தியர்களும் இத்திட்டத்தின் கீழ் நாடு திரும்பிக் கொண்டுள்ளனர்.
இவர்களுக்கு இந்தியத் தூதரகத்தில் அவுட் பாஸ் வழங்கப்படும். இதைக் காட்டி அவர்கள் தங்களது நாடுகளுக்குத் திரும்பலாம். இந்த நிலையில் அபுதாபியில் உள்ள கேரள சமூக மையத்தில் 30க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகத்தில் அவுட் பாஸ் வாங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஆனால் தூதரகத்திற்குச் சென்ற அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நேற்று தூதரகம் மூடியிருந்ததே இதற்குக் காரணம்.
கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகவே கேரள சமூக மையத்தில் அவுட் பாஸ்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வழங்கும் பொறுப்பை பிரித்துக் கொடுத்துள்ளது இந்தியத் தூதரகம் என்று அந்த அமைப்பின் தற்காலிகத் தலைவரான கபீர் பப்பு கூறியுள்ளார்.
இதுகுறித்து பப்பு கூறுகையில், கடந்த வியாழக்கிழமை முதல் நாங்கள் அவுட் பாஸ் கொடுத்து வருகிறோம். இதுவரை 600 பேருக்கு கொடுத்துள்ளோம்.
அவுட் பாஸ் பெறுவற்காக யாரும் தூதரகத்தை அணுக வேண்டியதில்லை. மாறாக, நேராக எங்களிடம் வந்து அவற்றைப் பெற்றுக் கொள்ளளாம் என அறிவித்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மையம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்றார் அவர்.
இதற்கிடையே, சிலருக்கு தவறான அவுட் பாஸ்களையும் கொடுத்து விடுகிறார்கள். ஆந்திராவைச் சேர்ந்த ஆதிபள்ளி ரமேஷ் என்பவருக்கு, வேறு ஒருவரின் அவுட் பாஸ் கொடுக்கப்பட்டது. இதனால் அவரை விமான நிலையத்திலிருந்து அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர். தற்போது புதிய அவுட் பாஸுக்காக அவர் காத்துள்ளார்.
சுப்ரமணியம் என்பவர் அவுட் பாஸ் பெறுவதற்காக தூதரகத்திற்கும், குடியேற்றப் பிரிவு அலுவலகத்திற்கும் கடந்த 20 நாட்ளாக அலையாய் அலைந்து கொண்டிருக்கிறாராம். இன்னும் அவருக்கு அவுட் பாஸ் கிடைத்தபாடில்லை.
அவுட் பாஸ் பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள இந்தியத் தூதரகம் 02-4494982 என்ற தொலைபேசி எண்ணைக் கொடுத்துள்ளது. ஆனால் அதற்கு போன் செய்தால் யாருமே போனை எடுப்பதில்லையாம்.
இதனால் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Monday, September 17, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment