Monday, September 17, 2007

ஷார்ஜா: 20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்

ஷார்ஜா: 20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்
தவித்து வரும் 200 தொழிலாளர்கள்!
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 16, 2007



ஷார்ஜா:

ஷார்ஜாவில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாமில், கடந்த 20 நாட்களாக கடும் தண்ணீர் பிரச்சினை நிலவுவதால் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஷார்ஜாவின் தேசிய பெயின்ட்ஸ் ரவுன்ட் அருகே இந்த முகாம் உள்ளது. இங்கு இரு பெரும் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் (அனைவரும் செக்யூரிட்டிக்களாக பணியாற்றுபவர்கள்) தங்கியுள்ளனர்.

முன்னணி செக்யூரிட்டி நிறுவனமான பென்ட்லி செக்யூரிட்டி மற்றும் சேப்ட்டி சர்வீஸஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 100 தொழிலாளர்கள் இவர்களில் அடக்கம்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த முகாமில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் சப்ளை இல்லையாம். இதனால் தொழிலாளர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தொழிலாளர் கூறுகையில், ரமலான் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் தண்ணீர் சப்ளை இல்லாதது பெரும் சிரமமாக உள்ளது. இங்குள்ள தொழிலாளர்கள் பெரும்பாலானோர் முஸ்லீம்கள். புனித மாதமான இந்த நாளில், தங்களது கடமைகளைச் செய்ய முடியாமல் அனைவரும் தவித்து வருகிறோம்.

பென்ட்லி நிறுவனம், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தண்ணீர் கட்டணத்தை செலுத்தாததால், தண்ணீர் விநியோகத்தை நகராட்சி துண்டித்து விட்டது. தற்போது தண்ணீர் சப்ளையை சீராக்கக் கோரி தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

தண்ணீர்ப் பிரச்சினை காரணமாக பல தொழிலாளர்கள் வேலைக்குப் போகாமல் உள்ளனராம். குளிக்காமல் கொள்ளாமல் எப்படி வேலைக்குப் போக முடியும். அதனால்தான் போகவில்லை. மேலும் எங்களில் சிலர் வேலைய விட்டே போய் விடலாமா என்று சிந்தித்துக் கொண்டுள்ளனர் என்று ஒரு தொழிலாளர் கூறினார்.

ஆனால் முகாமில் தண்ணீர்ப் பிரச்சினை இல்லை என்று பென்ட்லி நிறுவனம் மறுத்துள்ளது. முகாமில் ஒரு பிரச்சினையும் இல்லை, தொழிலாளர்கள்தான் பெரிதுபடுத்திக் கூறுகிறார்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவுட்பாஸ் குழப்பம்: அவதியில் இந்தியத் தொழிலாளர்கள்!

அவுட்பாஸ் குழப்பம்: அவதியில் இந்தியத் தொழிலாளர்கள்!
திங்கள்கிழமை, செப்டம்பர் 17, 2007



அபுதாபி:

சட்டவிரோதமாக குடியேறிய நூற்றுக்கணக்கான இந்தியர்கள், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ள பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் நாடு திரும்புவதற்காக, அவுட் பாஸ் கோரி இந்திய தூதரகத்தில் காத்துள்ளனர். ஆனால் தூதரக செயல்பாடுகள் குழப்பமாக இருப்பதால் அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சட்டவிரோதமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்து வேலை பார்த்து வருபவர்களுக்காக எமிரேட்ஸ் அரசு பொது மன்னிப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் பலர் தங்களது நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். ஏராளமான இந்தியர்களும் இத்திட்டத்தின் கீழ் நாடு திரும்பிக் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு இந்தியத் தூதரகத்தில் அவுட் பாஸ் வழங்கப்படும். இதைக் காட்டி அவர்கள் தங்களது நாடுகளுக்குத் திரும்பலாம். இந்த நிலையில் அபுதாபியில் உள்ள கேரள சமூக மையத்தில் 30க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகத்தில் அவுட் பாஸ் வாங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஆனால் தூதரகத்திற்குச் சென்ற அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நேற்று தூதரகம் மூடியிருந்ததே இதற்குக் காரணம்.

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகவே கேரள சமூக மையத்தில் அவுட் பாஸ்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வழங்கும் பொறுப்பை பிரித்துக் கொடுத்துள்ளது இந்தியத் தூதரகம் என்று அந்த அமைப்பின் தற்காலிகத் தலைவரான கபீர் பப்பு கூறியுள்ளார்.

இதுகுறித்து பப்பு கூறுகையில், கடந்த வியாழக்கிழமை முதல் நாங்கள் அவுட் பாஸ் கொடுத்து வருகிறோம். இதுவரை 600 பேருக்கு கொடுத்துள்ளோம்.

அவுட் பாஸ் பெறுவற்காக யாரும் தூதரகத்தை அணுக வேண்டியதில்லை. மாறாக, நேராக எங்களிடம் வந்து அவற்றைப் பெற்றுக் கொள்ளளாம் என அறிவித்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மையம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்றார் அவர்.

இதற்கிடையே, சிலருக்கு தவறான அவுட் பாஸ்களையும் கொடுத்து விடுகிறார்கள். ஆந்திராவைச் சேர்ந்த ஆதிபள்ளி ரமேஷ் என்பவருக்கு, வேறு ஒருவரின் அவுட் பாஸ் கொடுக்கப்பட்டது. இதனால் அவரை விமான நிலையத்திலிருந்து அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர். தற்போது புதிய அவுட் பாஸுக்காக அவர் காத்துள்ளார்.

சுப்ரமணியம் என்பவர் அவுட் பாஸ் பெறுவதற்காக தூதரகத்திற்கும், குடியேற்றப் பிரிவு அலுவலகத்திற்கும் கடந்த 20 நாட்ளாக அலையாய் அலைந்து கொண்டிருக்கிறாராம். இன்னும் அவருக்கு அவுட் பாஸ் கிடைத்தபாடில்லை.

அவுட் பாஸ் பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள இந்தியத் தூதரகம் 02-4494982 என்ற தொலைபேசி எண்ணைக் கொடுத்துள்ளது. ஆனால் அதற்கு போன் செய்தால் யாருமே போனை எடுப்பதில்லையாம்.

இதனால் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சட்ட விரோத குடியேற்றம்- ஆந்திரத் தொழிலாளர்களுக்கு அமைச்சர் கோரிக்கை

சட்ட விரோத குடியேற்றம்- ஆந்திரத் தொழிலாளர்களுக்கு அமைச்சர் கோரிக்கை
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 14, 2007



துபாய்:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என ஆந்திர மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகம்மது அலி சபீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமீரகத்தில் ஆந்திர மாநில தொழிலாளர்களின் நிலையினை ஆய்வு செய்ய ஆந்திர மாநில முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அமைச்சர் தலைமையில் வெளியுறவுத்துறை அதிகாரி ரவிசங்கர், அரசுத் துறை செயலர் ரமணா ரெட்டி, ஹைதராபாத் காவல்துறை துணை ஆணையர் அசோக் உள்ளிட்டோர் கடந்த வாரம் துபாய்க்கு நேரில் வருகை புரிந்து அவர்களது நிலைமையினை ஆய்வு செய்தனர்.

பின்னர் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் குடியுரிமைத்துறை அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து ஆந்திர மாநில தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை அமைச்சர் சபீர் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறுகையில், இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. கட்டுமானத் துறையில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. குறைந்த பட்சம் ஆறாயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே சட்டவிரோதமாக அமீரகத்தில் தங்கியிருப்போர் தாயகம் திரும்பி புதுவாழ்வைத் துவங்க வேண்டும்.

தற்போது 25,000 மேற்பட்டோருக்கு பணி வாய்ப்புகள் உள்ளது. ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மற்றும் கரீம் நகர் பகுதிகளில் வேலைவாய்ப்பு கண்காட்சி நடத்தப்பட்டு தாயகம் திரும்புவோருக்கு பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் கடன் வசதியும் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதுவரை 80,000 பேர் அமீரகத்தில் பொது மன்னிப்பின் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.

இதேபோல் தமிழக தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை களைய தமிழக அரசு குழு அனுப்ப முன் வருமா என்ற எதிர்பார்ப்பு அமீரகத்தில் அல்லலுற்று வரும் தமிழகத் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Saturday, September 15, 2007

யுஏஇ: விசிட் விசாவில் வேலை பார்த்தால் ஆயுள் கால தடை!

யுஏஇ: விசிட் விசாவில் வேலை பார்த்தால் ஆயுள் கால தடை!
சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2007


அபுதாபி:

சுற்றுலா விசா மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்து வேலை பார்த்தால் அவர்களுக்கு ஆயுட் காலத் தடை விதிக்கப்படும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிகளையும் அது வகுத்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை இணைச் செயலாளர் ஓபைத் ரஷீத் அல் சஹாமி கூறுகையில், சுற்றுலா விசாவில் வந்து வேலையில் சேருபவர்கள் நிரந்தரமாக தடை விதிக்கப்படுவார்கள். அவர்கள் எமிரேட்ஸுக்கு மறுபடியும் வரவே முடியாது.

மேலும், இவர்களுக்கு வேலை தரும் நிறுவன உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம் திர்ஹாம்கள் அபராதம் விதிக்கப்படும். அவர்களை வேலையில் சேர்த்து விடுவோருக்கு 1 லட்சம் திர்ஹாம்கள் அபராதம் விதிக்கப்படும்.

இன்னும் சில வாரங்களில் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றார் சஹாமி.

Friday, September 14, 2007

சென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு

சென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 14, 2007



சென்னை:

சென்னை அருகே வேலம்மாள் சர்வதேசப் பள்ளியில் பிளஸ்-1 மாணவன் படித்து வந்த மர்மமான முறையில் இறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் அருகேயுள்ள அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது ஒரே மகன் முகமது பிலால் (19). பொன்னேரி அருகில் உள்ள வேலம்மாள் இன்டர்நேஷனல் ரெசிடென்சி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை 7.30 மணிக்கு, பள்ளி நிர்வாகத்தினர், மண்ணடியில் உள்ள சாகுலின் தாத்தா அசேனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிலால் அவனது அறையில் மயங்கிக் கிடந்தான். அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியிலேயே இறந்து விட்டான் என்று கூறினர்.

இதைக் கேட்டுஅதிர்ச்சி அடைந்த அசேன், உறவினர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பிலாலின் சாவில் மர்மம் உள்ளது என்று கூறி பிலாலின் உறவினர்கள் போலீஸாரிடம் வாக்குவாதம் புரிந்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

சாகுல் ஹமீதின் குடும்ப நண்பரான காங்கிரஸ் எம்.பி. ஆருண் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பிலாலின் பெற்றோர் சவுதியில் இருந்து வந்த பிறகே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அதுவரை உடல் அப்போலோ மருத்துவமனையில் வைத்திருக்க போலீசார் அனுமதித்தனர்.

செளதியில் திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் சோதனை கட்டாயமாகிறது

செளதியில் திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் சோதனை கட்டாயமாகிறது

ஆகஸ்ட் 31, 2007

ரியாத்: செளதி அரேபியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந் நாட்டு அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

அதன்படி திருமணம் ஆகவுள்ள மணமகனும், மணமகளுக்கு எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாகிறது.

வரும் 2008ம் ஆண்டு முதல் இந்த எய்ட்ஸ் பரிசோதனை கட்டாய சட்டம் நடைமுறைக்கு வரும் என செளதி சுகாதார அமைச்சர் அல்-வாடன் தெரிவித்துள்ளார்.

எய்ட்ஸ் கணவனிடமிருந்து விவகாரத்து:

இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த பெண், தனது கணவருக்கு எய்ட்ஸ் நோய் பாதித்துள்ளதை சுட்டிக் காட்டி விவாகரத்து பெற்றுள்ளார்.

புஜாரியாவில் உள்ள ஷரியா நீதிமன்றம் அவருக்கு விவகாரத்து வழங்கியுள்ளது. தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதை மறைத்து பெண்ணை அவர் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.

ஷார்ஜா: மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை

ஷார்ஜா: மாடியிலிருந்து குதித்து இந்தியர் தற்கொலை

ஆகஸ்ட் 31, 2007

ஷார்ஜா: ஷார்ஜாவில் இந்தியர் ஒருவர் 3வது மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.

ஷார்ஜாவின் அபு சகாரா என்ற இடத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

ஹைதாரபாத்தைச் சேர்ந்தவர் முகம்மது அப்துல் ரஷீத் முகம்மது கெளஸ் (41). இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் ஹைதராபாத்தில் உள்ள பர்காஸ் என்ற இடத்தில் வசித்து வருகின்றனர்.

கெளஸ், ஷார்ஜாவில் உள்ள ஒரு ஆட்டோ உதிரி பாக நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாதம் 5000 தினார் சம்பளம் தருவதாக பேசப்பட்டிருந்தது. ஆனால் அதை விட குறைந்த அளவு சம்பளமே கெளஸுக்குத் தரப்பட்டுள்ளது.

இதனால் மனம் உடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாக கெளஸின் உறவினர் கூறியுள்ளார்.

ஆனால் இதை கெளஸ் வேலை பார்த்து வந்த சமீரா ஆட்டோ உதிரி பாக நிறுவனம் மறுத்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தற்கொலை செய்து கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த 2002ம் ஆண்டு 54 பேரும், 2003ல் 64 பேரும், 2005ல் 82 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு மட்டும் 100 பேர் தற்கொலை செய்து கொண்டனர். இவர்களின் தற்கொலைக்கு முக்கிய காரணமாக இருப்பது சம்பளப் பிரச்சினை, நிதி நெருக்கடி மற்றும் தனிப்பட்ட குடும்பக் காரணங்கள்தான்.

இந்தியர்களின் தொடர் தற்கொலைகளைத் தொடர்ந்த இந்தியத் தூதரகம், நெருக்கடி தடுப்பு திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. மனக் குழப்பம், விரக்தி, தற்கொலை மனோபாவம் உள்ளவர்களுக்கு இவர்கள் கவுன்சிலிங் மூலம் உதவுகிறார்கள்.

கடந்த ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. அதன் படி ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழ்க்கிழமை வரை தினசரி காலை 11 மணி முதல் 6 மணி வரை கவுன்சிலிங் மையம் இயங்குகிறது. இந்த மையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 050-9433111. வாரம் முழுவதும் இது இயங்குகிறது.

இந்த கவுன்சிலிங் மையத்தை அணுகி உதவி பெறுமாறு இந்தியர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி

துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி
முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

செப்டம்பர் 01, 2007

-முதுவை ஹிதாயத்

துபாய்: துபாயில் அமீரக ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தினரின் சந்திப்பு நிகழ்ச்சி வரும் செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் ஜமால் முஹம்மது கல்லூரி தாளாளர் எம்.ஜே.எம். அப்துல் கபூர் சாஹிப், பொருளாளர் கே.ஏ. கலீல் அஹமது. முதல்வர் டாக்டர் எம்.ஷேக் முஹம்மது, முன்னாள் மாணவர் சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.எம். ஷாகுல் ஹமீது உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க பொதுச்செயலாளர் எம். அப்துல் ரகுமான் தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்புவோரும், அமீரகத்தில் பணிபுரிந்து வரும் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களும் ஒருங்கிணைப்பாளர் ஹெச்.இ. ஜாபர் சித்திக்கை 050 5489609 எனும் தொலைபேசியிலோ அல்லது hejaf@yahoo.com எனும் மின்னஞ்சல் மூலமோ தொடர்பு கொள்ளலாம்.

கணவர் மரணம்: மகள் பாஸ்போர்ட்டில்

கணவர் மரணம்: மகள் பாஸ்போர்ட்டில்
குழப்பம் - துபாயில் தவிக்கும் இந்தியப் பெண்!

செப்டம்பர் 02, 2007

துபாய்: விசா காலம் முடிவடைந்ததால் தனது 6 வயது மகளுடன் நாடு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த அலியா பேகம் என்ற 35 வயதுப் பெண்மணி.

ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அலியா பேகம். இவர் கடந்த 1999ம் ஆண்டு முகம்மது சாதிக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தன்னை ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டு அலியாவை திருமணம் செய்துள்ளார் சாதிக்.

பின்னர் வேலைக்காரப் பெண் என்று விசா வாங்கி அலியாவை எமிரேட்ஸுக்கு அழைத்து வந்துள்ளார். இங்கு வந்த பின்னர்தான் சாதிக் ஒரு பாகிஸ்தான் நாட்டவர் என்று அலியாவுக்குத் தெரிய வந்தது.

மேலும் சாதிக்குக்கு பாகிஸ்தானில் ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகி விட்டதும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் அலியாவுக்கு பின்னர் தெரிய வந்தது. இருப்பினும் அலியாவுடன் எமிரேட்ஸிலேயே குடும்பம் நடத்தி வந்தார் சாதிக். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். அவருக்கு 6 வயதாகிறது, பெயர் ஷாமா சாதிக்.

டிரைவராக வேலை பார்த்து வந்த சாதிக் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் அலியாவின் நிலை கேள்விக்குறியானது. இந்த நிலையில் அவரது விசாக் காலம் முடிவடைந்தது. அதேசமயம், சாதிக் மூலம் பிறந்த மகளுக்கு பாகிஸ்தான் பாஸ்போர்ட் இருந்ததால் அலியாவால் தாயகம் திரும்ப முடியவில்லை.

விசா காலம் முடிவடைந்ததால் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் அலியாவுக்கு. ஆனால் அவரது மகளுக்கு பாகிஸ்தான் பாஸ்போர்ட் உள்ளதால் அவரை இந்தியாவுக்குக் கூட்டிச் செல்ல முடியாத இக்கட்டான நிலை மறுபக்கம்.

இந்த நிலையில் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் அலியா நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளார் அலியா. தனது நிலை குறித்து அலியா கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே நான் மிகுந்த சிரமமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். கிடைத்த வேலையைச் செய்து கொண்டு என்னையும், எனது மகளையும் காப்பாற்றி வருகிறேன்.

எனது மகளுக்கு முறையான விசா இல்லாத காரணத்தால் எந்த பள்ளியும் அவளை சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை. மேலும், பள்ளியில் சேர்த்தாலும் கூட அவளுக்குரிய கட்டணத்தை என்னால் கட்டவும் முடியவில்லை.

இந்த நிலையில் தற்போது இந்தியா திரும்ப விண்ணப்பித்துள்ளேன். அங்கு போனதும், எனது மகளுக்கு இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கப் போகிறேன் என்றார்.

இதற்கிடையே, அலியாவுடன் அவரது மகளும் இந்தியா செல்வதற்கு வசதியாக, அவருக்கு விசா வழங்க இந்திய தூதரகம் முன்வந்துள்ளது.

அஜ்மானில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி

அஜ்மானில் மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 7, 2007


அஜ்மான்

அஜ்மான் இந்தியர் சங்கம் மற்றும் இப்னு சினா - ஆலியா மருத்துவ குழுமம் மற்றும் முஸ்லிம் முன்னேற்றக் கழகம் இணைந்து வழங்கும்
சிறப்பு மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

அஜ்மான் இந்தியர் சங்கத்தில் இன்று இரவு 7 மணி முதல் இரவு 9.30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.

நிகழ்ச்சி விவரம்

பகுதி-1 :
பெயர் பதிவு செய்தல்
வரவேற்புரை: டாக்டர். அப்துல் கபார்
துவக்கி வைப்பவர்: டாக்டர். கீதா அசோக் ராஜ்
தலைமையுரை: திரு. அப்துல் ஹாதி, தலைவர், முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

பகுதி-2 :
"குழந்தை நலம்": டாக்டர். ஜேக்கப்,
"இருதயம் மற்றும் இரத்த அழுத்த நோய்கள்": டாக்டர்.அபுபக்கர்,
"மகப்பேறு கால பாதுகாப்பு முறைகள்" : டாக்டர். நிர்மலா.


பகுதி-3:
"பயணிகள் கவனித்திற்கு..": டாக்டர். ஷர்மா,
"மனித வாழ்வின் மகத்துவம்" : திரு.ஜலாலுதீன் (இயக்குநர்-உணர்வாய் உன்னை!), கேள்வி-பதில் நேரம்.
நன்றியுரை: திரு. மு.ஆ. முஹம்மது இஸ்மாயில்,

மேலும் விவரங்களுக்கு : 050-8631397, 050-5300187, 050-3958626 என்ற தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம்.

நாக்பூரிலிருந்து துபாய்க்கு புதிய விமான சேவை

நாக்பூரிலிருந்து துபாய்க்கு புதிய விமான சேவை
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 7, 2007


துபாய்:

நாக்பூரிலிருந்து துபாய்க்கு செப்டம்பர் 24ம் தேதி முதல் புதிய விமான சேவையை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் தொடங்குகிறது.

முதல் விமானம் நாக்பூரிலிருந்து 24ம் தேதி பிற்பகல் 1.30 மணிக்குக் கிளம்பும். துபாய்க்கு மாலை 6.25 மணிக்கு வந்து சேரும். செப்டம்பர் 26ம் தேதி முதல் முறைப்படியான விமான சேவை தொடங்கும். வாரம் மூன்று முறை இந்த விமான சேவை இயக்கப்படும்.

புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நாக்பூரிலிருந்து துபாய்க்கு விமான சேவை நடக்கும். துபாயிலிருந்து துபாய் நேரப்படி மாலை 3.50 மணிக்கு கிளம்பி இரவு 8.35 மணிக்கு நாக்பூரை வந்தடையும்.

மறு மார்க்கத்தில் நாக்பூரிலிரந்து பிற்பகல் 12.30 மணிக்குக் கிளம்பி துபாயை அந்நாட்டு நேரப்படி மாலை 3 மணிக்கு விமானம் சென்றடையும்.

துபாய் - நாக்பூர் சேவைக்கான அறிமுகக் கட்டணமாக 169 தினார் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரிகள் தனி.

துபாய் மற்றும் ஷார்ஜாவிலிருந்து இந்தியாவின் 10 நகரங்களுக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வாரத்திற்கு 50 விமானங்களை இயக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது

துபாய் அரசுக்கு இந்திய தொழிலதிபர்

துபாய் அரசுக்கு இந்திய தொழிலதிபர்
5 லட்சம் திர்ஹாம்கள் நன்கொடை
சனிக்கிழமை, செப்டம்பர் 7, 2007



துபாய்:

துபாய் சுகாதாரத் துறைக்கு இந்தியத் தொழிலதிபர் ஒருவர் 5 லட்சம் திர்ஹாம்களை நன்கொடையாக அளித்துள்ளார்.

துபாயில் உள்ள பிரபல நகைக் கடை ப்யூர் கோல்ட் ஜூவல்லர்ஸ். இந்த நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் பிரோஸ் மெர்ச்சன்ட். இவர் துபாய் அரசின் சுகாதாரத் துறையின் பல்வேறு மருத்துவத் திட்டங்களுக்கு நிதியுதவியாக, 5 லட்சம் திர்ஹாம் தொகையை நன்கொடையாக அளித்துள்ளார்.

இதற்கான காசோலையை அவர் துபாய் சுகாதாரத் துறை அமைச்சர் ஹூமைத் முகம்மது ஓபைத் அல் கத்தாமியிடம் வியாழக்கிழமை வழங்கினார்.

துபாய் குடிமக்களுக்கும், துபாயில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்களுக்கும் தேவையான மருத்துவத் திட்டங்களுக்கு உதவ இந்த நிதியுதவியை அளித்துள்ளதாக மெர்ச்சன்ட் தெரிவித்துள்ளார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கத்தாமி கூறுகையில், சுகாதாரத் துறையின் மருத்துவத் திட்டங்களில் தனியாரையும் ஈடுபடுத்தும் முகமாகவே இதுபோன்ற நிதியுதவியை அரசு பெறுகிறது. துபாய் மக்கள் நல்ல சுகாதாரத்துடனும், நலத்துடனும் வாழ அரசுடன் கை கோர்த்து செயல்பட தனியாரும் முன் வர வேண்டியது அவசியமாகும் என்றார்.

எமிரேட்ஸ் அதிபருடன் இந்திய தூதர் சந்திப்பு

எமிரேட்ஸ் அதிபருடன் இந்திய தூதர் சந்திப்பு
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2007



துபாய்:

ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீபா பின் ஸையித் அல் நஹ்யானை, இந்தியா உள்ளிட்ட 10 நாடுகளின் தூதர்கள் சந்தித்துப் பேசினர்.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கான புதிய இந்திய தூதராக தல்மிஷ் அஹமது நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உள்பட பத்து வெளிநாட்டு தூதர்கள் அமீரக அதிபரை சந்தித்தனர்.

அவர்களிடம் அதிபர் அல் நஹ்யான் பேசுகையில், அமீரகம் அனைத்து நாடுகளுடனும் நல்லுறவையே விரும்பகிறது. அதற்கு புதிதாக தங்களது நாட்டு தூதராக நியமிக்கப்பட்டுள்ள அனைவரும் ஒத்துழைப்பை நல்கிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தூதர்கள் தாங்கள் அமீரகத்தில் பணியாற்றுவது குறித்த தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஷேக் மன்சூர், வெளியுறவு அமைச்சர் ஷேக் அப்துல்லா, உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எமிரேட்ஸில் புகையிலை விளம்பரங்களுக்கு தடை

எமிரேட்ஸில் புகையிலை விளம்பரங்களுக்கு தடை
செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2007



துபாய்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் புகையிலை தொடர்பான அனைத்து வகையான விளம்பரங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் புகையிலை குறித்த விளம்பரங்களைத் தடை செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத் துறையினரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள உடல்நலம் குறித்த விளம்பர சட்டப்படி, பெரும் விற்பனை அங்காடிகள், கடைகள், எரிபொருள் நிரப்பும் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் புகையிலை குறித்த விளம்பரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய அறிஞர் மறைவுக்கு இரங்கல்

இஸ்லாமிய அறிஞர் மறைவுக்கு இரங்கல்
வியாழக்கிழமை, செப்டம்பர் 13, 2007


துபாய்:

அகில இந்திய முஸ்லீம் தனிநபர் வாரியத்தின் நிறுவனரும், பொருளாளருமான மெளலானா அப்துல் கரீம் பரேக்கின் மறைவுக்கு துபாய் இந்திய இஸ்லாமிய மையம் இரங்கல் தெரிவித்துள்ளது.

பரேக், மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நேற்று மரணமடைந்தார். பல்வேறு சமூக, கலாச்சார, மத அமைப்புகளில் பணியாற்றியுள்ளார் பரேக். ஏராளமான நூல்களையும் எழுதியுள்ளார். திருக்குரான் குறித்த விளக்கத்தையும் உருதில் எழுதியுள்ளார்.

அவருடைய மறைவுக்கு துபாய் இந்திய இஸ்லாமிய மையத் தலைவர் எஸ்.எம். சையத் கலீல் இரங்கல் தெரிவித்துள்ளார். மையத் துணைத் தலைவர் முகம்மது சல்மான் அகமதவும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

துபாயில் ரமலான் நோன்பு தொடங்கியது

துபாயில் ரமலான் நோன்பு தொடங்கியது
வியாழக்கிழமை, செப்டம்பர் 13, 2007



- முதுவை ஹிதாயத்

துபாய்:

துபாயில் ரமலான் மாத நோன்பு வியாழக்கிழமை முதல் தொடங்கியது.

திருக்குர்ஆன் இறக்கியருளப்பெற்ற புனித மாதம் ரமலான் என்பது குறிப்பிடத்தக்கது. இஸ்லாமியர்கள் இம்மாதத்தில் பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும் நோன்பு பிடித்து வருகின்றனர்.

ரமலான் மாதம் துவங்கப்பட்டதையடுத்து துபாயிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளிலும் இரவு நேரங்களில் தராவீஹ் எனப்படும் இரவு சிறப்புத் தொழுகை பள்ளிகளில் தொழவைக்கப்பட்டது.

ரமலான் மாதத்தையட்டி வேலை நேரம் எட்டு மணியிலிருந்து ஆறு மணி நேரமாக அரசுத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் குறைக்கப்பட்டுள்ளது.

நோன்பு திறப்பதற்கு அரசு சார்பிலும், தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துபாயில் தமிழக சமுதாய அமைப்பான இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் (ஈமான்) சார்பில் தமிழகத்து நோன்புக்கஞ்சி தினமும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் ஈமான் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலியின் மேற்பார்வையில் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இம்மாதத்தில் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டிகள் நடத்தப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் பரிசாக அளிக்கப்படுகிறது. ரமலான் குறித்த சிறப்பு சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ரமலான் மாதம் துபாயில் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாகும். பகல் நேரங்களில் பொது இடங்களில் உணவருந்த அனுமதியில்லை. எனினும் பார்சல் எடுத்துச் சென்று வீட்டில் சாப்பிடலாம்.

கடந்த வருடம் துபாய் வருகை புரிந்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம். காதர் மொகிதீன் நோன்புக்காலம் முழுவதையும் துபாயிலேயே இருக்க விரும்புவதாக குறிப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.