Monday, May 5, 2008

துபாய்-அமீரக தமிழர்கள் அமைப்பின் புதிய நிர்வாகிகள்

துபாய்-அமீரக தமிழர்கள் அமைப்பின் புதிய நிர்வாகிகள்


துபாயில் பல்வேறு சமூக, கலாச்சாரப் பணிகளை மேற்கொண்டு வரும் 'அமீரகத் தமிழர்கள் அமைப்பின்' 2008-09ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அதில் தலைவராக எஸ். அமுதரசன், செயலாளராக சைபுதீன், இணைச் செயலாளராக முஸ்தாக் அகமது, பொருளாளராக நயீம், ஒருங்கிணைப்பாளராக ரயீஸ், மக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளராக முதுவை ஹிதாயத் ஆகியோரும்

செயற்குழு உறுப்பினர்களாக அன்பழகன், சலீம், செந்தில், பாரத், யாசின் அகமது உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

அமீரகத் தமிழர்கள் அமைப்பு குறித்த மேலதிக விபரம் பெற: 050 47 48 490

மின்னஞ்சல் etadxb@yahoo.com

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2008/0503-new-executive-members-for-ameeraga-tamilargal.html

Monday, September 17, 2007

ஷார்ஜா: 20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்

ஷார்ஜா: 20 நாட்ளாக தண்ணீர் இல்லாமல்
தவித்து வரும் 200 தொழிலாளர்கள்!
ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 16, 2007



ஷார்ஜா:

ஷார்ஜாவில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கியுள்ள முகாமில், கடந்த 20 நாட்களாக கடும் தண்ணீர் பிரச்சினை நிலவுவதால் தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

ஷார்ஜாவின் தேசிய பெயின்ட்ஸ் ரவுன்ட் அருகே இந்த முகாம் உள்ளது. இங்கு இரு பெரும் பாதுகாப்பு நிறுவனத்தில் பணியாற்றும் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் (அனைவரும் செக்யூரிட்டிக்களாக பணியாற்றுபவர்கள்) தங்கியுள்ளனர்.

முன்னணி செக்யூரிட்டி நிறுவனமான பென்ட்லி செக்யூரிட்டி மற்றும் சேப்ட்டி சர்வீஸஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 100 தொழிலாளர்கள் இவர்களில் அடக்கம்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் பாகிஸ்தான், வங்கதேசம், நேபாள நாடுகளைச் சேர்ந்தவர்கள். இந்த முகாமில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் சப்ளை இல்லையாம். இதனால் தொழிலாளர்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு தொழிலாளர் கூறுகையில், ரமலான் ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில் தண்ணீர் சப்ளை இல்லாதது பெரும் சிரமமாக உள்ளது. இங்குள்ள தொழிலாளர்கள் பெரும்பாலானோர் முஸ்லீம்கள். புனித மாதமான இந்த நாளில், தங்களது கடமைகளைச் செய்ய முடியாமல் அனைவரும் தவித்து வருகிறோம்.

பென்ட்லி நிறுவனம், நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தண்ணீர் கட்டணத்தை செலுத்தாததால், தண்ணீர் விநியோகத்தை நகராட்சி துண்டித்து விட்டது. தற்போது தண்ணீர் சப்ளையை சீராக்கக் கோரி தொழிலாளர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

தண்ணீர்ப் பிரச்சினை காரணமாக பல தொழிலாளர்கள் வேலைக்குப் போகாமல் உள்ளனராம். குளிக்காமல் கொள்ளாமல் எப்படி வேலைக்குப் போக முடியும். அதனால்தான் போகவில்லை. மேலும் எங்களில் சிலர் வேலைய விட்டே போய் விடலாமா என்று சிந்தித்துக் கொண்டுள்ளனர் என்று ஒரு தொழிலாளர் கூறினார்.

ஆனால் முகாமில் தண்ணீர்ப் பிரச்சினை இல்லை என்று பென்ட்லி நிறுவனம் மறுத்துள்ளது. முகாமில் ஒரு பிரச்சினையும் இல்லை, தொழிலாளர்கள்தான் பெரிதுபடுத்திக் கூறுகிறார்கள் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

அவுட்பாஸ் குழப்பம்: அவதியில் இந்தியத் தொழிலாளர்கள்!

அவுட்பாஸ் குழப்பம்: அவதியில் இந்தியத் தொழிலாளர்கள்!
திங்கள்கிழமை, செப்டம்பர் 17, 2007



அபுதாபி:

சட்டவிரோதமாக குடியேறிய நூற்றுக்கணக்கான இந்தியர்கள், தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ள பொது மன்னிப்பு திட்டத்தின் கீழ் நாடு திரும்புவதற்காக, அவுட் பாஸ் கோரி இந்திய தூதரகத்தில் காத்துள்ளனர். ஆனால் தூதரக செயல்பாடுகள் குழப்பமாக இருப்பதால் அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சட்டவிரோதமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்து வேலை பார்த்து வருபவர்களுக்காக எமிரேட்ஸ் அரசு பொது மன்னிப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம் பலர் தங்களது நாடுகளுக்குத் திரும்பி வருகின்றனர். ஏராளமான இந்தியர்களும் இத்திட்டத்தின் கீழ் நாடு திரும்பிக் கொண்டுள்ளனர்.

இவர்களுக்கு இந்தியத் தூதரகத்தில் அவுட் பாஸ் வழங்கப்படும். இதைக் காட்டி அவர்கள் தங்களது நாடுகளுக்குத் திரும்பலாம். இந்த நிலையில் அபுதாபியில் உள்ள கேரள சமூக மையத்தில் 30க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இந்தியத் தூதரகத்தில் அவுட் பாஸ் வாங்குவதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டன. ஆனால் தூதரகத்திற்குச் சென்ற அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. நேற்று தூதரகம் மூடியிருந்ததே இதற்குக் காரணம்.

கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காகவே கேரள சமூக மையத்தில் அவுட் பாஸ்கள் மற்றும் பாஸ்போர்ட்டுகளை வழங்கும் பொறுப்பை பிரித்துக் கொடுத்துள்ளது இந்தியத் தூதரகம் என்று அந்த அமைப்பின் தற்காலிகத் தலைவரான கபீர் பப்பு கூறியுள்ளார்.

இதுகுறித்து பப்பு கூறுகையில், கடந்த வியாழக்கிழமை முதல் நாங்கள் அவுட் பாஸ் கொடுத்து வருகிறோம். இதுவரை 600 பேருக்கு கொடுத்துள்ளோம்.

அவுட் பாஸ் பெறுவற்காக யாரும் தூதரகத்தை அணுக வேண்டியதில்லை. மாறாக, நேராக எங்களிடம் வந்து அவற்றைப் பெற்றுக் கொள்ளளாம் என அறிவித்துள்ளோம். ஞாயிற்றுக்கிழமை மட்டும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மையம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்றார் அவர்.

இதற்கிடையே, சிலருக்கு தவறான அவுட் பாஸ்களையும் கொடுத்து விடுகிறார்கள். ஆந்திராவைச் சேர்ந்த ஆதிபள்ளி ரமேஷ் என்பவருக்கு, வேறு ஒருவரின் அவுட் பாஸ் கொடுக்கப்பட்டது. இதனால் அவரை விமான நிலையத்திலிருந்து அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர். தற்போது புதிய அவுட் பாஸுக்காக அவர் காத்துள்ளார்.

சுப்ரமணியம் என்பவர் அவுட் பாஸ் பெறுவதற்காக தூதரகத்திற்கும், குடியேற்றப் பிரிவு அலுவலகத்திற்கும் கடந்த 20 நாட்ளாக அலையாய் அலைந்து கொண்டிருக்கிறாராம். இன்னும் அவருக்கு அவுட் பாஸ் கிடைத்தபாடில்லை.

அவுட் பாஸ் பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள இந்தியத் தூதரகம் 02-4494982 என்ற தொலைபேசி எண்ணைக் கொடுத்துள்ளது. ஆனால் அதற்கு போன் செய்தால் யாருமே போனை எடுப்பதில்லையாம்.

இதனால் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சட்ட விரோத குடியேற்றம்- ஆந்திரத் தொழிலாளர்களுக்கு அமைச்சர் கோரிக்கை

சட்ட விரோத குடியேற்றம்- ஆந்திரத் தொழிலாளர்களுக்கு அமைச்சர் கோரிக்கை
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 14, 2007



துபாய்:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என ஆந்திர மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகம்மது அலி சபீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமீரகத்தில் ஆந்திர மாநில தொழிலாளர்களின் நிலையினை ஆய்வு செய்ய ஆந்திர மாநில முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அமைச்சர் தலைமையில் வெளியுறவுத்துறை அதிகாரி ரவிசங்கர், அரசுத் துறை செயலர் ரமணா ரெட்டி, ஹைதராபாத் காவல்துறை துணை ஆணையர் அசோக் உள்ளிட்டோர் கடந்த வாரம் துபாய்க்கு நேரில் வருகை புரிந்து அவர்களது நிலைமையினை ஆய்வு செய்தனர்.

பின்னர் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் குடியுரிமைத்துறை அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து ஆந்திர மாநில தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை அமைச்சர் சபீர் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறுகையில், இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. கட்டுமானத் துறையில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. குறைந்த பட்சம் ஆறாயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே சட்டவிரோதமாக அமீரகத்தில் தங்கியிருப்போர் தாயகம் திரும்பி புதுவாழ்வைத் துவங்க வேண்டும்.

தற்போது 25,000 மேற்பட்டோருக்கு பணி வாய்ப்புகள் உள்ளது. ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மற்றும் கரீம் நகர் பகுதிகளில் வேலைவாய்ப்பு கண்காட்சி நடத்தப்பட்டு தாயகம் திரும்புவோருக்கு பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் கடன் வசதியும் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதுவரை 80,000 பேர் அமீரகத்தில் பொது மன்னிப்பின் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.

இதேபோல் தமிழக தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை களைய தமிழக அரசு குழு அனுப்ப முன் வருமா என்ற எதிர்பார்ப்பு அமீரகத்தில் அல்லலுற்று வரும் தமிழகத் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Saturday, September 15, 2007

யுஏஇ: விசிட் விசாவில் வேலை பார்த்தால் ஆயுள் கால தடை!

யுஏஇ: விசிட் விசாவில் வேலை பார்த்தால் ஆயுள் கால தடை!
சனிக்கிழமை, செப்டம்பர் 15, 2007


அபுதாபி:

சுற்றுலா விசா மூலம் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு வந்து வேலை பார்த்தால் அவர்களுக்கு ஆயுட் காலத் தடை விதிக்கப்படும் என ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தொழிலாளர் நலத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக புதிய விதிகளையும் அது வகுத்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் நலத்துறை இணைச் செயலாளர் ஓபைத் ரஷீத் அல் சஹாமி கூறுகையில், சுற்றுலா விசாவில் வந்து வேலையில் சேருபவர்கள் நிரந்தரமாக தடை விதிக்கப்படுவார்கள். அவர்கள் எமிரேட்ஸுக்கு மறுபடியும் வரவே முடியாது.

மேலும், இவர்களுக்கு வேலை தரும் நிறுவன உரிமையாளர்களுக்கு 50 ஆயிரம் திர்ஹாம்கள் அபராதம் விதிக்கப்படும். அவர்களை வேலையில் சேர்த்து விடுவோருக்கு 1 லட்சம் திர்ஹாம்கள் அபராதம் விதிக்கப்படும்.

இன்னும் சில வாரங்களில் இந்த விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றார் சஹாமி.

Friday, September 14, 2007

சென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு

சென்னை பள்ளியில் மாணவன் மர்மச் சாவு
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 14, 2007



சென்னை:

சென்னை அருகே வேலம்மாள் சர்வதேசப் பள்ளியில் பிளஸ்-1 மாணவன் படித்து வந்த மர்மமான முறையில் இறந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் அருகேயுள்ள அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சாகுல் அமீது. இவரது ஒரே மகன் முகமது பிலால் (19). பொன்னேரி அருகில் உள்ள வேலம்மாள் இன்டர்நேஷனல் ரெசிடென்சி பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை 7.30 மணிக்கு, பள்ளி நிர்வாகத்தினர், மண்ணடியில் உள்ள சாகுலின் தாத்தா அசேனுக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிலால் அவனது அறையில் மயங்கிக் கிடந்தான். அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது, வழியிலேயே இறந்து விட்டான் என்று கூறினர்.

இதைக் கேட்டுஅதிர்ச்சி அடைந்த அசேன், உறவினர்களை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பிலாலின் சாவில் மர்மம் உள்ளது என்று கூறி பிலாலின் உறவினர்கள் போலீஸாரிடம் வாக்குவாதம் புரிந்தனர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

சாகுல் ஹமீதின் குடும்ப நண்பரான காங்கிரஸ் எம்.பி. ஆருண் மருத்துவமனைக்கு வந்து அஞ்சலி செலுத்தினார். பிலாலின் பெற்றோர் சவுதியில் இருந்து வந்த பிறகே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். அதுவரை உடல் அப்போலோ மருத்துவமனையில் வைத்திருக்க போலீசார் அனுமதித்தனர்.

செளதியில் திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் சோதனை கட்டாயமாகிறது

செளதியில் திருமணத்துக்கு முன் எய்ட்ஸ் சோதனை கட்டாயமாகிறது

ஆகஸ்ட் 31, 2007

ரியாத்: செளதி அரேபியாவில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அந் நாட்டு அரசு புதிய சட்டம் ஒன்றை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

அதன்படி திருமணம் ஆகவுள்ள மணமகனும், மணமகளுக்கு எய்ட்ஸ் நோய் பரிசோதனை செய்து கொள்வது கட்டாயமாகிறது.

வரும் 2008ம் ஆண்டு முதல் இந்த எய்ட்ஸ் பரிசோதனை கட்டாய சட்டம் நடைமுறைக்கு வரும் என செளதி சுகாதார அமைச்சர் அல்-வாடன் தெரிவித்துள்ளார்.

எய்ட்ஸ் கணவனிடமிருந்து விவகாரத்து:

இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்டைச் சேர்ந்த பெண், தனது கணவருக்கு எய்ட்ஸ் நோய் பாதித்துள்ளதை சுட்டிக் காட்டி விவாகரத்து பெற்றுள்ளார்.

புஜாரியாவில் உள்ள ஷரியா நீதிமன்றம் அவருக்கு விவகாரத்து வழங்கியுள்ளது. தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு இருப்பதை மறைத்து பெண்ணை அவர் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது.