Monday, September 17, 2007

சட்ட விரோத குடியேற்றம்- ஆந்திரத் தொழிலாளர்களுக்கு அமைச்சர் கோரிக்கை

சட்ட விரோத குடியேற்றம்- ஆந்திரத் தொழிலாளர்களுக்கு அமைச்சர் கோரிக்கை
வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 14, 2007



துபாய்:

ஐக்கிய அரபு எமிரேட்ஸில், சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்ப வேண்டும் என ஆந்திர மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகம்மது அலி சபீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமீரகத்தில் ஆந்திர மாநில தொழிலாளர்களின் நிலையினை ஆய்வு செய்ய ஆந்திர மாநில முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அமைச்சர் தலைமையில் வெளியுறவுத்துறை அதிகாரி ரவிசங்கர், அரசுத் துறை செயலர் ரமணா ரெட்டி, ஹைதராபாத் காவல்துறை துணை ஆணையர் அசோக் உள்ளிட்டோர் கடந்த வாரம் துபாய்க்கு நேரில் வருகை புரிந்து அவர்களது நிலைமையினை ஆய்வு செய்தனர்.

பின்னர் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களில் குடியுரிமைத்துறை அதிகாரிகள், இந்திய தூதரக அதிகாரிகள் மற்றும் பிரமுகர்களை சந்தித்து ஆந்திர மாநில தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை அமைச்சர் சபீர் கேட்டறிந்தார்.

பின்னர் அவர் கூறுகையில், இந்திய பொருளாதாரம் வளர்ந்து வருகிறது. கட்டுமானத் துறையில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன. குறைந்த பட்சம் ஆறாயிரம் ரூபாய் சம்பாதிப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே சட்டவிரோதமாக அமீரகத்தில் தங்கியிருப்போர் தாயகம் திரும்பி புதுவாழ்வைத் துவங்க வேண்டும்.

தற்போது 25,000 மேற்பட்டோருக்கு பணி வாய்ப்புகள் உள்ளது. ஆந்திர மாநிலம் நிஜாமாபாத் மற்றும் கரீம் நகர் பகுதிகளில் வேலைவாய்ப்பு கண்காட்சி நடத்தப்பட்டு தாயகம் திரும்புவோருக்கு பணிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் கடன் வசதியும் அரசு சார்பில் செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதுவரை 80,000 பேர் அமீரகத்தில் பொது மன்னிப்பின் மூலம் தாயகம் திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் பெரும்பாலோர் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.

இதேபோல் தமிழக தொழிலாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகளை களைய தமிழக அரசு குழு அனுப்ப முன் வருமா என்ற எதிர்பார்ப்பு அமீரகத்தில் அல்லலுற்று வரும் தமிழகத் தொழிலாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

No comments: