கணவர் மரணம்: மகள் பாஸ்போர்ட்டில்
குழப்பம் - துபாயில் தவிக்கும் இந்தியப் பெண்!
செப்டம்பர் 02, 2007
துபாய்: விசா காலம் முடிவடைந்ததால் தனது 6 வயது மகளுடன் நாடு திரும்ப முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் ஆந்திராவைச் சேர்ந்த அலியா பேகம் என்ற 35 வயதுப் பெண்மணி.
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் அலியா பேகம். இவர் கடந்த 1999ம் ஆண்டு முகம்மது சாதிக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். தன்னை ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்தவர் என்று சொல்லிக் கொண்டு அலியாவை திருமணம் செய்துள்ளார் சாதிக்.
பின்னர் வேலைக்காரப் பெண் என்று விசா வாங்கி அலியாவை எமிரேட்ஸுக்கு அழைத்து வந்துள்ளார். இங்கு வந்த பின்னர்தான் சாதிக் ஒரு பாகிஸ்தான் நாட்டவர் என்று அலியாவுக்குத் தெரிய வந்தது.
மேலும் சாதிக்குக்கு பாகிஸ்தானில் ஏற்கனவே ஒரு கல்யாணம் ஆகி விட்டதும், அவருக்கு குழந்தைகள் இருப்பதும் அலியாவுக்கு பின்னர் தெரிய வந்தது. இருப்பினும் அலியாவுடன் எமிரேட்ஸிலேயே குடும்பம் நடத்தி வந்தார் சாதிக். இவர்களுக்கு ஒரு மகளும் உள்ளார். அவருக்கு 6 வயதாகிறது, பெயர் ஷாமா சாதிக்.
டிரைவராக வேலை பார்த்து வந்த சாதிக் மாரடைப்பால் மரணமடைந்தார். இதனால் அலியாவின் நிலை கேள்விக்குறியானது. இந்த நிலையில் அவரது விசாக் காலம் முடிவடைந்தது. அதேசமயம், சாதிக் மூலம் பிறந்த மகளுக்கு பாகிஸ்தான் பாஸ்போர்ட் இருந்ததால் அலியாவால் தாயகம் திரும்ப முடியவில்லை.
விசா காலம் முடிவடைந்ததால் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய நிர்ப்பந்தம் அலியாவுக்கு. ஆனால் அவரது மகளுக்கு பாகிஸ்தான் பாஸ்போர்ட் உள்ளதால் அவரை இந்தியாவுக்குக் கூட்டிச் செல்ல முடியாத இக்கட்டான நிலை மறுபக்கம்.
இந்த நிலையில் பொது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் அலியா நாடு திரும்ப விண்ணப்பித்துள்ளார் அலியா. தனது நிலை குறித்து அலியா கூறுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே நான் மிகுந்த சிரமமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறேன். கிடைத்த வேலையைச் செய்து கொண்டு என்னையும், எனது மகளையும் காப்பாற்றி வருகிறேன்.
எனது மகளுக்கு முறையான விசா இல்லாத காரணத்தால் எந்த பள்ளியும் அவளை சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை. மேலும், பள்ளியில் சேர்த்தாலும் கூட அவளுக்குரிய கட்டணத்தை என்னால் கட்டவும் முடியவில்லை.
இந்த நிலையில் தற்போது இந்தியா திரும்ப விண்ணப்பித்துள்ளேன். அங்கு போனதும், எனது மகளுக்கு இந்திய குடியுரிமை கோரி விண்ணப்பிக்கப் போகிறேன் என்றார்.
இதற்கிடையே, அலியாவுடன் அவரது மகளும் இந்தியா செல்வதற்கு வசதியாக, அவருக்கு விசா வழங்க இந்திய தூதரகம் முன்வந்துள்ளது.
Friday, September 14, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment