அரபு நாடுகளில் பணிப்பெண்கள் நியமனம்:
செப். 1 முதல் அமல் புதிய கட்டுப்பாடுகள்
ஆகஸ்ட் 25, 2007
ரியாத்: அரபு நாடுகளில் வேலை பார்க்க இந்தியாவிலிருந்து பணிப்பெண்களை வேலைக்கு எடுப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்தியா விதித்துள்ளது. செப்டம்பர் 1ம் தேதி முதல் இந்தக் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.
வீட்டு வேலை பார்ப்பதற்காக இந்தியாவிலிருந்து அரபு நாடுகளுக்குச் செல்லும் பெண்களுக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு பல்வேறு தொந்தரவுகள் ஏற்படுகின்றன. சரியான சம்பளம் தரப்படுவதில்லை, அதிக வேலை வாங்குவது மற்றும் பாலியல் தொல்லைகளும் கொடுக்கப்படுவதாக புகார்கள் குவிந்தன.
இதையடுத்து அரபு நாடுகளில் பணியமர்த்தப்படும் இந்திய பணிப் பெண்களை தேர்வு செய்வதில் பலவித கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் வருகிற செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சவூதி அரேபியா உள்ளிட்ட 18 நாடுகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிலிருந்து வீட்டு வேலைக்கா தேர்வு செய்யப்படும் பெண்களுக்கு குறைந்தபட்ச மாதச் சம்பளமாக 400 டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதவிர அந்தப் பெண்களின் பெயரில், இந்திய தூதரகத்தில் 2500 டாலரை காப்புத் தொகையாக செலுத்த வேண்டும்.
30 வயதுக்கு மேற்பட்டவர்களைத்தான் பணிப்பெண்களாக நியமிக்க வேண்டும். வீட்டு வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மொபைல் போன் வசதி செய்து தரப்பட வேண்டும். அவர்களின் எண்களை இந்திய தூதரகத்திடம் தெரிவிக்க வேண்டும்.
புதிய கட்டுப்பாட்டுகளின்படி, வேலைக்குச் செல்லும் பெண்களின் பாஸ்போர்ட்டில் குடியுரிமை சோதனை அவசியம் என்ற முத்திரை பதிக்கப்படும். மேலும், வேலை தருவோர் அது தொடர்பான நியமன உத்தரவின் நகலை சம்பந்தப்பட்ட நாட்டின் இந்தியத் தூதரகத்தில் ஒப்படைக்க வேண்டும். இதையடுத்து அவர்கள் குறித்து இந்திய தூதரகம் விசாரணை நடத்தும். அதன் பின்னரே பணி நியமன ஒப்பந்தம் இறுதி செய்யப்படும்.
இந்த கட்டுப்பாடுகள் அடங்கிய சுற்றறிக்கை வளைகுடா நாடுகளில் உள்ள அனைத்து இந்தியத் தூதரகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வீட்டு வேலைக்கான பணிப் பெண்கள், பட்லர்கள், சமையல் வேலை செய்யும் பெண்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு இந்த கட்டுப்பாடுகள் பொருந்தும். சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், கத்தார், ஓமன், குவைத், லிபியா, ஜோர்டான், சூடான், ஏமன், சிரியா, லெபனான், புரூணே, ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். ஈராக்கும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
வளைகுடா நாடுகளில் 2 லட்சம் இந்தியப் பெண்கள் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், சவூதியில் 15 ஆயிரம் பேர் வீட்டுப் பணிப் பெண்களாக உள்ளனர்.
மேலும் டாக்டர்கள், நர்ஸ்கள் மற்றும் பிற தொழிலிலும் இந்தியப் பெண்கள் கணிசமான அளவில் உள்ளனர்.
Wednesday, August 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment