ஷார்ஜா சாலை விபத்தில் தமிழர் உள்பட 5 இந்தியர்கள் பலி
ஜூலை 31, 2007
ஷார்ஜா: ஷார்ஜாவில் மினி பஸ்ஸும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர் உள்பட 5 இந்தியர்கள் உயிரிழந்தனர். 17 பேர் படுகாயமடைந்தனர்.
ஒரு கட்டுமானக் கம்பெனியைச் சேர்ந்த மினி பஸ்ஸில், தொழிலாளர்கள் தாங்கள் தங்கியிருந்த முகாமிலிருந்து ஷார்ஜாவில் உள்ள சஜா என்ற பகுதிக்கு வேலைக்காக போய்க் கொண்டிருந்தனர்.
அந்தப் பேருந்து ஷார்ஜா - அல்தாஹித் நெடுஞ்சாலையில் போய்க் கொண்டிருந்தபோது, 7வது வளைவில் எதிரே வந்த லாரியுடன் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
லாரி டிரைவர் உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், ஷார்ஜாவில் உள்ள அல்-குஸாமி மற்றும் குவைத்தி மருத்துவமனையிலும், அஜ்மானில் உள்ள கலீபா மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மினி பஸ்ஸின் டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.
இறந்தவர்கள் விவரம்
1. ரங்கராஜன் பெருமாள் (25), தமிழ்நாடு.
2. தாமஸ் தாமஸ் (51), கும்பநாடு, கேரளா.
3. பிரகாஷ் ராம் (45), பஞ்சாப்.
4. கேசவன் அஜீத் (37), திருவனந்தபுரம்.
5. ஷோபன் மணிகண்டன் (30), திருவனந்தபுரம்.
இவர்களில் அஜீத்தும், ராமும் அந்தக் கட்டுமான நிறுவனத்தில் கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வந்தனர். மற்றவர்கள் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள்.
விபத்தில் சிக்கிய லாரி, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை முந்த முயன்றபோது எதிரே வந்த மினி பஸ்ஸுடன் மோதியது.
இந்த விபத்தில் மொத்தம் 17 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்தில் சிக்கிய பேருந்தில் இந்தியா, நேபாளம், வங்கதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பயணித்துள்ளனர். இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்ப கட்டுமான நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
http://thatstamil.oneindia.in/news/2007/07/31/sharjah.html
Wednesday, August 1, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment