நாடு திரும்பும் பொது மன்னிப்பு பெற்ற இந்தியர்கள்
ஆகஸ்ட் 24, 2007
துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கியிருந்ததற்காக நாடு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்த இந்தியத் தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு கிடைத்து நாடு திரும்ப வழி கிடைத்துள்ளதால் பெரும் நிம்மதியும், சந்தோஷமும் அடைந்துள்ளனர்.
அரபு நாடுகளில் வேலை தேடி டூரிஸ்ட் விசா மூலம் வந்த பல இந்தியத் தொழிலாளர்கள், இங்கு வந்த பின்னர் வேலை தேடி சட்டவிரோதமாக குடியேறி விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களால் மீண்டும் நாடு திரும்ப முடியாமல் அங்குள்ள சிறைகளில் அடைபட நேரிடுகிறது.
இப்படிப்பட்ட தொழிலாளர்களுக்கு பொது மன்னிப்பு திட்டத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பொது மன்னிப்பு கிடைக்கப் பெற்றவர்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறார்கள்.
இப்படி சொந்த நாடு திரும்ப வழி பிறந்த இந்தியத் தொழிலாளர்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். அவர்களில் நாராயணன் மற்றும் சந்தோஷம் ஆகியோரும் அடக்கம்.
இவர்களும் மற்றவர்களைப் போல டூரிஸ்ட் விசாவில் துபாய் வந்தவர்கள்தான். தற்போது பொது மன்னிப்பு மூலம் தாயகம் திரும்பக் காத்துள்ளனர். இவர்களுக்கு இலவச விமான டிக்கெட் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இருவரும் நாடு திரும்புகிறார்கள். இவர்களைப் போல 36 இந்தியத் தொழிலாளர்கள் நாடு திரும்புகின்றனர்.
இதுகுறித்து சந்தோஷ் கூறுகையில், நல்ல சம்பளத்துடன் வேலை பார்ப்பதற்காகத்தான் இங்கு விசிட் விசாவில் வந்தேன். ஆனால் நான் நினைத்தது நடக்கவில்லை. எனவே சிறையில் அடைபடுவதை விட இப்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போது மன்னிப்புத் திட்டத்தின் கீழ் நாடு திரும்ப முடிவு செய்து விட்டேன்.
பொது மன்னிப்பு தொடர்பான அனைத்து ஆவணங்களும் ஓ.கே. ஆகி விட்டன. ஆகஸ்ட் 26ம் தேதி நான் ஊர் திரும்ப விமானத்தில் ஏறவுள்ளேன். ஊரில் எனக்கு இன்னும் கொஞ்சம் கடன் உள்ளது. ஆனால் அதை நினைத்தால் இங்கு எனக்கு சிறைதான் கிடைக்கும். எனவேதான் ஊர் திரும்புகிறேன் என்றார்.
சந்தோஷ் உள்ளிட்ட பொது மன்னிப்பு கிடைத்தத் தொழிலாளர்களுக்கு துபாயைச் சேர்ந்த இந்திய நிறுவனமான வேலி ஆப் லவ், இலவச டிக்கெட்டுக்களை வழங்கியது. இவர்கள் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சொந்த ஊர் திரும்பவுள்ளனர்.
வேலி ஆப் லவ் அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஆர்.கே.நாயர் கூறுகையில், படிப்படியாக இலவச டிக்கெட்டுக்களை வழங்கி வருகிறோம். அடுத்த வாரம் மேலும் சிலருக்கு டிக்கெட் தரப்படவுள்ளது. இந்தியர்கள் மட்டுமல்லாது, இலங்கை, எத்தியோப்பியா, வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் நாங்கள் இலவச டிக்கெட்டுகளை வழங்கி அவர்களும் தாயகம் திரும்ப உதவுகிறோம் என்றார்.
ஜார்ஜ் என்பவர் கூறுகையில், பொது மன்னிப்பு கிடைக்கப் பெற்றவர்களிடம், மறுபடியும் தவறான ஏஜென்டுகள் மூலம் இங்கு வந்து சிக்கலில் மாட்டிக் கொள்ள வேண்டாம் என அறிவுரை கூறி நாங்கள் அனுப்பி வைக்கிறோம் என்றார்.
Wednesday, August 29, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment